மதுரையில் மாயமான பள்ளி மாணவர் பிணமாக மீட்கப்பட்டு, அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ள நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை வேடிக்கை பார்க்கும் த.வெ.க. அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்து தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை ஆனையூர் அருகே 11-ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவர் ஒருவர் கடந்த சில நாட்களாகக் காணாமல் போயிருந்தார். இந்நிலையில், அவர் அங்குள்ள ஒரு கழிவுநீர் குட்டையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது உடலைக் கைப்பற்றி நடத்தப்பட்ட உடற்கூறாய்வுப் பரிசோதனையில், அம்மாணவர் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்சம்பவம் குறித்துத் தனது எக்ஸ் (X) வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தி.மு.க. எம்.பி. கனிமொழி: "மதுரை ஆனையூர் அருகே காணாமல் போன 11-ஆம் வகுப்பு மாணவன் கழிவுநீர் குட்டையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், உடற்கூறு ஆய்வில் அவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது.
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் த.வெ.க. அரசின் அலட்சியப் போக்கால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகின்றன என்ற கேள்வி எழுகிறது. மாணவனின் மரணம் தொடர்பாகச் சமரசமற்ற விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் வலியுறுத்தியுள்ளார்.

