தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கூவைகிணறு லைன் தெருவைச் சேர்ந்தவர் பரமசிவன் மனைவி பொன்னம்மாள் (80). இவர் நேற்று காலை 9.00 மணியளவில் கூவைகிணறு கிராமத்தில் உள்ள நூலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவருக்குப் பின்னால் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்குச் சொந்தமான வேன் எதிர்பாராத விதமாகப் பொன்னம்மாள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இவ்விபத்து தொடர்பாக வேனை இயக்கி வந்த கண்டுகொண்டான் மாணிக்கம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் சுடலைமுத்து (48) என்பவர் மீது சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

