பாளையங்கோட்டை அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஜோதி பாபு. சமையல் எரிவாயு விநியோகஸ்தரான இவருக்கு வல்லநாடு அருகிலுள்ள கோனார்குளம் கிராமத்தில் சிலிண்டர் கிடங்கு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் கிடங்கின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

அங்கு வைக்கப்பட்டிருந்த 32 சமையல் எரிவாயு சிலிண்டர்களைத் திருடியதுடன், அவற்றை அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோடு ஆட்டோவிலேயே ஏற்றித் தப்பிச் சென்றுள்ளனர். இத்திருட்டு குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், முறப்பநாடு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் லூர்து சேவியர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்.

காவல்துறையின் விசாரணையில், வல்லநாட்டைச் சேர்ந்த சந்திரன் மகன் சின்னதுரை மற்றும் கைலாசம் மகன் மணிமந்திரம் ஆகிய இருவர்தான் லோடு ஆட்டோவுடன் சிலிண்டர்களைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சின்னதுரை மற்றும் மணிமந்திரம் ஆகிய 2 பேரையும் முறப்பநாடு காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த லோடு ஆட்டோ மற்றும் திருடப்பட்ட 32 சமையல் எரிவாயு சிலிண்டர்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்து மீட்டனர்.