தூத்துக்குடி எஸ்.எஸ்.மாணிக்கபுரம் பகுதியில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தங்கத்தேர் கெபியின் 44-ஆம் ஆண்டு திருவிழா கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களின் போது நாள்தோறும் மாலை நேரத்தில் சிறப்பு ஜெபமாலையும், பிரார்த்தனைகளும் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து அன்னையின் திருவுருவச் சப்பர பவனியும், அதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கான அசன விருந்தும் சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவின் இறுதி நாளான இன்று, தூய தோமையார் கல்விக் குழுமத்தின் தாளாளர் அருட்பணி. அமலன் தமியான் தலைமையில் சிறப்பு ஆடம்பரத் திருவிழாக் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.

இத்திருப்பலியில் தூய தோமையார் திருத்தூதர் ICSE பள்ளியின் முதல்வர் அருட்பணி. இன்பேன்ட் மற்றும் லூர்தம்மாள்புரம் லூர்து அன்னை ஆலயப் பங்குத்தந்தை அருட்பணி. செல்வன் பெர்னான்டோ ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதில் தூத்துக்குடி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான இறைமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பலி நிகழ்வுகளுக்குப் பின்னர், கேக் வெட்டி அன்னை வேளாங்கண்ணி மாதாவின் பிறந்த நாள் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இத்திருவிழாவிற்கான முழு ஏற்பாடுகளையும் தங்கத்தேர் கெபி கமிட்டி, புனித வேளாங்கண்ணி மாதா அன்பிய மக்கள் மற்றும் புனித பூண்டி மாதா அன்பிய மக்கள் இணைந்து செய்திருந்தனர்.