தூத்துக்குடி 3-ஆவது மைல் காவலர் குடியிருப்பைக் சேர்ந்தவர் வீரபுத்திரன் மகன் மயிலேறி (45). 2017-ஆம் ஆண்டு காவலர் பேட்சைச் சேர்ந்த இவர், தூத்துக்குடி ஆயுதப்படையில் (3-ஆவது பிளட்டூன்) நிலைக் காவலராகப் பணியாற்றி வந்தார். இன்று மயிலேறி தனது 3-ஆவது மைல் காவலர் குடியிருப்பில் இருந்து, மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் வீட்டின் பாதுகாப்புப் பணிக்காகத் தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
பாளையங்கோட்டை பிரதான சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி பகுதியில், மேற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சாலையைக் கடக்க முயன்றபோது, கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வந்த மற்றொரு இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதிப் பலத்த விபத்துக்குள்ளானது. இதில் காவலர் மயிலேறிக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.
விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அருகிலிருந்த பொதுமக்கள், பலத்த காயமடைந்த காவலர் மயிலேறியை உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையப் போலீசார் இவ்விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பி.என்.டி. காலனி 12-ஆவது தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சண்முகநாதன் (24) என்பவது மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

