தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் கிராமத்திலிருந்து லட்சத்தீவு நோக்கி மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற விசைப்படகையும், அதிலிருந்த 9 மீனவர்களையும் தடைசெய்யப்பட்ட கடல் பகுதியில் சென்றதாகக் கூறி லட்சத்தீவு கவராத்தி கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தைச் சேர்ந்த நட்டார் என்ற மிக்கேல்ராஜ் என்பவருக்குச் சொந்தமான செவுள் வலை விசைப்படகில், கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சின் துறைமுகத்திலிருந்து 9 மீனவர்கள் லட்சத்தீவுகள் நோக்கி மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

இன்று அதிகாலை சுமார் 3.00 மணியளவில் கவராத்தி தீவுப் பகுதியில் விசைப்படகு சென்று கொண்டிருந்தபோது, பாதுகாப்பு காரணங்களுக்காகத் தடைசெய்யப்பட்ட கடல் பகுதிக்குள் நுழைய முயன்றதாகக் கூறி கவராத்தி கடற்படையினர் அந்த விசைப்படகைக் கைப்பற்றிச் சிறைபிடித்தனர்.

படகு உரிமையாளர் நட்டார் என்ற மிக்கேல்ராஜ் உட்படப் படகிலிருந்த 9 மீனவர்களும் கவராத்தி தீவில் கடற்படையினரின் விசாரணைக்காக விசைப்படகிலேயே சிறை வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தருவைகுளம் பகுதி கடலோர மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.