தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவங்களிலும், சட்ட விதிகளை மீறித் தரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் தயாரிப்பது கண்டறியப்பட்டால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் எச்சரித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவு சேவை நிறுவனங்களிலும் சுகாதாரம், உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காகச் செப்டம்பர் முதல் நவம்பர் 30, 2026 வரை 3 மாத காலத்திற்குச் சிறப்பு ஆய்வு நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
உணவு வணிகர்களுக்கான முக்கிய வழிகாட்டுதல்கள்:
அனைத்து உணவு வணிக உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் FSSAI இணையதளம் (https://foscos.fssai.gov.in) மூலம் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்றுச் செயல்பட வேண்டும்.
FSSAI உரிமம் பெற்ற தரமான மூலப்பொருட்களைக் கொண்டே சுகாதார முறையில் உணவுகளைத் தயாரிக்க வேண்டும்.
தரத்தில் சந்தேகத்திற்குரிய மூலப் பொருட்களையோ அல்லது அனுமதிக்கப்பட்ட செயற்கை நிறமிகளை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகவோ பயன்படுத்தக் கூடாது.
ஒருமுறை பயன்படுத்தி ஆற வைத்த சமையல் எண்ணெயை மீண்டும் சூடுபடுத்திப் பயன்படுத்தக் கூடாது. அத்தகைய எண்ணெயைப் பயோ-டீசல் தயாரிப்பிற்கு FSSAI அங்கீகரித்த சேகரிப்பு நிறுவனங்களிடம் ஒப்படைக்கலாம்.
பாக்கெட் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் தயாரிப்பாளர் முகவரி, தயாரிப்பு தேதி, காலாவதியாகும் காலம், சைவ/அசைவக் குறியீடு, ஊட்டச்சத்து விவரம் மற்றும் FSSAI உரிம எண் ஆகியவை அவசியம் இடம்பெற வேண்டும்.
ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமித் தொற்று இல்லாத சூழலில் உணவுகளைத் தயாரிக்க வேண்டும். சமையலறையில் பூச்சிகள் நுழையாதவாறு வலைகள் அடிப்பதுடன் 'Pest Control' நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
உணவ தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீரைப் பரிசோதித்த அறிக்கையைப் பராமரிக்க வேண்டும். ஊழியர்கள் தொற்றுநோயற்றவர்கள் என்பதற்கான மருத்துவச் சான்றுடன், ஹெபடைடிஸ்-ஏ மற்றும் டைபாய்டு தடுப்பூசிகளைச் செலுத்தியிருக்க வேண்டும்.
சுவர்களில் எண்ணெய் படிந்து அசுத்தமாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். துருப்பிடிக்காத கத்திகள் மற்றும் வெட்டும் கருவிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
சமைத்த உணவுகளை நெடுநாட்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விநியோகிக்கக் கூடாது.
ஊழியர்கள் கையுறை, முடிக் கவசம் மற்றும் மேலங்கி அணிந்து பணியாற்ற வேண்டும்.
உணவு வணிகர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்களின் சரிபார்ப்பு பட்டியலைப் பதிவிறக்கம் செய்து, சுய தணிக்கை மூலம் குறைபாடுகளை முன்னதாகவே நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். சட்ட விதிகளை மீறித் தரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் தயாரிப்பது கண்டறியப்பட்டால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் எச்சரித்துள்ளார்.

