தமிழக அரசின் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளைக் களைய வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில்கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை உடனடியாக நீக்க வேண்டும், விடுபட்டவர்கள் மற்றும் புதிய ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டைகளை விரைந்து வழங்க வேண்டும், ஓய்வூதியர்கள் அவசரச் சிகிச்சைக்கு அரசு அங்கீகரிக்காத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொண்டாலும், அதற்கான முழு மருத்துவச் செலவையும் தமிழக அரசே ஏாற்று வழங்க வேண்டும் உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான ஓய்வூதியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திக் கோஷங்களை எழுப்பினர். இதேபோன்று, தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட கோவில்பட்டி மற்றும் சாத்தான்குளம் ஆகிய பகுதிகளிலும் ஓய்வூதியர்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

