கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி இரவு, திருநெல்வேலி - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பொட்டலூரணி கிராமத்திற்கு கிழக்கே உள்ள பகுதியில் வாலிபர் ஒருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயங்களுடன் கிடந்துள்ளார். அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், செப்டம்பர் 6-ஆம் தேதி அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்த நபர் குறித்து காவல்துறையினரின் விசாரணை நடத்தியதில் அவர் தூத்துக்குடி பாளையம் ரோடு சிதம்பரநகர் திம்மையார் காலனியைச் சேர்ந்த ஜெயசூர்யா என்பவரது மகன் கௌஷிக்குமார் (31) என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, கௌஷிக்குமாரின் உடலுக்குத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தைக் கண்டறிய தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

