தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே கீழக்கல்லாம்பாறையைச் சேர்ந்த தொழிலாளியான முருகப்பெருமாள் (29) என்பவரது குடும்பத்தினருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பேச்சி என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குரும்பூரிலிருந்து தனது தாய் பேச்சியுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த முருகப்பெருமாளை, புரையூர் அருகே பேச்சி மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் வழிமறித்துள்ளனர். திடீரென பாட்டிலால் இருவரையும் தாக்கியுள்ளனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதைப் பார்த்து 4 பேரும் தப்பிச் சென்றனர்.

தாக்குதலில் காயமடைந்த தாயும் மகனும் வீட்டிற்குச் சென்று கதவைப் பூட்டிக் கொண்டனர். பின் தொடர்ந்து வந்த பேச்சி உள்ளிட்ட 4 பேரும் முருகப்பெருமாள் வீட்டின் கதவை அருவாளால் வெட்டி உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

வீட்டிற்குள் இருந்த தாயையும் மகனையும் அருவாளால் வெட்ட முயன்ற போது, அவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு மீண்டும் அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததால், 4 பேரும் கொலை மிரட்டல் விடுத்துத் தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், குரும்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய பேச்சி உட்பட 4 பேரை வலைவீசித் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.