இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மற்றும் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் இணைந்து தேசிய ஊட்டச்சத்து வார விழா கொண்டாடப்பட்டது.

சமச்சீர் உணவு, சரியான ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்துப் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 1 முதல் 7 ஆம் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து வார விழா கொண்டாடப்படுகிறது.

இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த இவ்விழாவில், மாணவர்கள் குப்பை உணவுகளைத் தவிர்த்து ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளவும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தால் வழங்கப்படும் சத்து மாத்திரைகளைத் தவறாது உட்கொள்ளவும், ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்கவும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சியில் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்ட விளக்கு, சிறுதானியங்கள், கொழுக்கட்டை வகைகள், பயறு வகைகள், கீரை வகைகள், முட்டை மற்றும் சத்துமாவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

பள்ளியில் தொடங்கிய தேசிய ஊட்டச்சத்து வார விழிப்புணர்வுப் பேரணியில் மாணவர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி, கோஷங்கள் எழுப்பியவாறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று மீண்டும் பள்ளியை அடைந்தனர்.

ஊட்டச்சத்து வினாடி-வினா போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்குத் திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.

கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் முத்து முருகன் இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் மரிய செல்வி மற்றும் சமூகத் தணிக்கை மாவட்ட வள அலுவலர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்கச் செயலாளர் ரமேஷ் குமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட வட்டார அலுவலர் திலகா மற்றும் இளையரசனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையச் சித்த மருத்துவர் சக்தி ரஞ்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு ஊட்டச்சத்தின் அவசியம் குறித்துப் பேசினர். சிறப்பு விருந்தினர்கள் காய்கறிகளால் செய்யப்பட்ட குத்துவிளக்கை ஏற்றி வைத்துத் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வுப் பேரணியைத் துவக்கி வைத்தனர்.

ரோட்டரி சங்கத் துணைத் தலைவர் கண்ணன், சுகாதார ஆய்வாளர் பாலசுப்ரமணியன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர்கள் பாலம்மாள், பேச்சியம்மாள், திலகராணி உள்ளிட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் உதவித் தலைமையாசிரியை முருகசரஸ்வதி நன்றி கூறினார்.