சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கையின் போது மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படாததைக் கண்டித்து, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் தூத்துக்குடியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் ஜே.பி. கண்ணன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் சாலமன் ராஜ் மற்றும் மாவட்டப் பொருளாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மறியல் போராட்டத்தின் போது தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஜெபஸ்டின் ராஜ் கண்டன உரையாற்றினார்.

இப்போராட்டத்தில் கயத்தார் மாற்றுத்திறனாளிகள் ஒன்றியச் செயலாளர் காந்திராஜ் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டு அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் மாற்றுத்திறனாளிகளின் நலன் சார்ந்த கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி நடத்தப்பட்ட இந்தச் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.