தூத்துக்குடி முத்தையாபுரத்தில் குடும்பத் தகராறு காரணமாக மாமனாரைச் சரமாரியாக அருவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டுத் தப்பிய மருமகனைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவைச் சேர்ந்த சங்கரன் மகன் முனியசாமி (40). ஆட்டோ ஓட்டுநரான இவர், தனது மகள் வைஷ்ணவியை மதுரை குருதேவன் நகரைச் சேர்ந்த பொன்னையா மகன் முருகன் (25) என்பவருக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

திருமணத்திற்குப் பிறகு கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் முருகன் தனது மனைவியை அடித்துச் சித்திரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, முனியசாமி மதுரைக்குச் சென்று தனது மகளை மீட்டு முத்தையாபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் மதுரையிலிருந்து புறப்பட்டு முத்தையாபுரத்திற்கு வந்த முருகன், மாமனார் வீட்டின் கதவைத் தட்டி உறங்கிக் கொண்டிருந்த முனியசாமியை எழுப்பியுள்ளார்.

வீட்டிற்கு வெளியே வைத்து, "எனது மனைவியை இத்தனை நாட்கள் எப்படி உங்கள் வீட்டில் வைத்திருக்கலாம்? அவளை உடனே என்னுடன் அனுப்பி வை" என்று கூறித் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த முருகன் தான் மறைத்து வைத்திருந்த அருவாளால் மாமனார் முனியசாமியைச் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இரத்த வெள்ளத்தில் உயிருக்குப்போராடிய முனியசாமியை உறவினர்கள் மீட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 10 மணி அளவில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய மருமகன் முருகனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் முத்தையாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.