தூத்துக்குடி நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளின் விசாரணைக்குத் தொடர்ந்து ஆஜராகாமல் தவிர்த்து வரும் 10 பேருக்கு இறுதி வாய்ப்பு வழங்கி, குறிப்பிட்ட தேதிகளுக்குள் ஆஜராகாவிட்டால் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்படுவார்கள் எனத் தூத்துக்குடி 2-வது நீதித்துறை நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகள் தொடர்பாகத் தச்சர் தெருவைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (எ) விக்னேஷ், லூர்தம்மாள்புரம் கலைஞர் நகர் சுகுமார், கீழ அலங்காரத்தட்டு ஆல்பர்ட், ஆரோக்கியபுரம் அந்தோணிசாமி, நெல்லை தாழையூத்து மாடசாமி, குலசேகரன்பட்டினம் விஜய்சங்கர், தாய்நகர் வென்சுலின், சுனாமி காலனி செல்லப்பா, கிருஷ்ணராஜபுரம் பிரபு மற்றும் ராஜேந்திரன் ஆகிய 10 பேர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வருகின்றனர்.

வழக்குகளை விசாரித்த தூத்துக்குடி 2-வது நீதித்துறை நடுவர் மன்ற நடுவர் இலக்கியா, ராஜேந்திரன் வரகிற 15-ஆம் தேதியும், விக்னேசுவரன் என்ற விக்னேஷ், சுகுமார், ஆல்பர்ட், மாடசாமி ஆகியோர் 16-ஆம் தேதியும், விஜய்சங்கர், செல்லப்பா ஆகியோர் 17-ஆம் தேதியும், அந்தோணிசாமி, வென்சுலின், பிரபு ஆகியோர் 18-ஆம் தேதியும் விசாரணைக்கு தவறாமல் ஆஜராக வேண்டும். ஆஜராகவில்லையென்றால் அவர்கள் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்படுவார்கள் என்று உத்தரவிட்டு உள்ளார்.