தூத்துக்குடி அருகேயுள்ள தருவைகுளம் மீனவக் கிராமத்தில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் தேவாலயத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் பைபிள் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இதன்படி, இந்த ஆண்டிற்கான கண்காட்சி இன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற்றது. இதில் தருவைகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

கண்காட்சிக்கு வந்த மக்களுக்குத் தேவாலயம் சார்பில் மதிய உணவாக மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் பிரியாணி சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. பிரியாணி சாப்பிட்டுவிட்டு வீட்டிற்குச் சென்ற பொதுமக்களுக்கு மாலை 5 மணி அளவில் திடீரென வாந்தி, மயக்கம் மற்றும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 64 பேர் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால், ஒரே படுக்கையில் 3 பேர் வரை அமரவைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படும் நிலை ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த தருவைகுளம் காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும், தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி மற்றும் தாசில்தார் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று, கோவிலில் மீதம் இருந்த பிரியாணியைச் சோதனைக்காகச் சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். சமைக்கும் போது பிரியாணியில் பல்லி அல்லது எலி ஏதேனும் விழுந்ததா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தருவைகுளம் மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.