தூத்துக்குடியில் ஒட்டகம் மற்றும் குதிரைகளை உரியப் பராமரிப்பின்றிச் சித்திரவதை செய்தது குறித்துப் புகார் அளித்த விலங்குகள் நல ஆர்வலருக்குக் கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது வடபாகம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த சுனிதா (44), மேனகா காந்தியின் ‘பீப்பிள் ஃபார் அனிமல்ஸ்’ அமைப்பில் உறுப்பினராக உள்ளார். தூத்துக்குடி மட்டக்கடை சந்தனமாரியம்மன் கோவில் தெருப் பகுதியில் ஒரு ஒட்டகம் மற்றும் இரண்டு குதிரைகள் போதிய பராமரிப்பின்றி, காயங்களுடன் துன்புறுத்தப்படுவதாக இவருக்குத் தகவல் கிடைத்தது.

முறையான ஆவணங்கள் இன்றி விலங்குகளை வளர்த்து வந்த உரிமையாளர்கள், நோய்வாய்ப்பட்ட நிலையிலும் அந்த ஒட்டகம் மற்றும் குதிரைகளைப் பணம் சம்பாதிக்கும் நோக்கில் திருவிழாக்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தி வந்துள்ளனர். இது குறித்துச் சுனிதா நேரில் சென்று தட்டிக்கேட்டுப் புகார் அளித்துள்ளார்.

அப்போது, விலங்குகளைப் பராமரித்து வந்த உரிமையாளர் ராமதாஸ் மற்றும் அவரது உதவியாளர் ராஜா ஆகிய இருவரும் சுனிதாவைத் தகாத வார்த்தைகளால் பேசி, கத்தியைக் காட்டி குத்திக் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். மேலும் பரத் என்பவர் தொலைபேசி வாயிலாகவும் சுனிதாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

இச்சம்பவம் குறித்துச் சுனிதா அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையச் சார்பு ஆய்வாளர் நிவேதா வழக்குப் பதிவு செய்தார். பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 296(b), 325, 351(2) மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் பிரிவு 11 ஆகியவற்றின் கீழ் ராமதாஸ் மற்றும் ராஜா ஆகிய இருவர் மீது வழக்குகள் பாய்கிறது.

பாதிக்கப்பட்ட ஒட்டகம் மற்றும் குதிரைகளைக் காவல்துறையினர் மீட்டுப் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடியில் விலங்குகள் நலப் பெண் ஆர்வலருக்குக் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.