தூத்துக்குடியில் மகளிர் காவலர்கள், தங்களுக்கு வார விடுமுறையை முறையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ஸ்ரீநாத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 155-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச் சிலைக்கு அமைச்சர் ஸ்ரீநாத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மரியாதை செலுத்திய பிறகு, அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மகளிர் காவலர்களிடம், "உங்களுக்கு ஏதேனும் கோரிக்கைகள் உள்ளதா?" என ஸ்ரீநாத் கேட்டறிந்தார். அதற்குப் பதிலளித்த மகளிர் காவலர்கள், "பெண் காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கும் நடைமுறையை எந்தவிதத் தடங்கலுமின்றி முறையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தனர்.
மகளிர் காவலர்களின் கோரிக்கையைக் கேட்ட அமைச்சர் ஸ்ரீநாத், "உங்களது கோரிக்கை உடனடியாக முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். திங்கட்கிழமை நடைபெற உள்ள காவல்துறைக்கான மானியக் கோரிக்கையின் போது, முதலமைச்சர் காவல்துறையினருக்காக மேலும் பல்வேறு புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளார்" எனத் தெரிவித்தார்.

