தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு வெளியிட வலியுறுத்தி, மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்திடம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை பாத்திமா பாபு தலைமையில் நிர்வாகிகள், மீன்வளத் துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான ஸ்ரீநாத்தைச் நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
மனுவில் குறிப்பிட்டுள்ள கோரிக்கைகள்: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எந்த ஒரு காரணம் கொண்டும் மீண்டும் தூத்துக்குடி மண்ணில் இயக்க அனுமதிக்கக் கூடாது.நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும். துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுத்துத் தண்டனை வழங்க வேண்டும்.
செப்டம்பர் 7-ஆம் தேதி தொடங்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிகழ்வின் போது, மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் செல்வராஜ், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாவட்டத் தலைவர் ராஜா, திரு இருதய நண்பர்கள் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் பிரின்ஸ், நாட்டுப்படகு மீனவர் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரீகன், தமிழ்நாடு கிரில் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் இருதயராஜ், மற்றும் மின்னல் அம்ஜித், லயன்ஸ் டவுன் பகுதி மக்கள் பிரதிநிதி ராபின் ஆகியோர் உடனிருந்தனர்.

