தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பழுதடைந்த லிப்டிற்குள் நோயாளி மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உட்பட 7 பேர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகச் சிக்கித் தவித்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி கேம்ப்-1 பகுதியைச் சேர்ந்த ராமர் பாண்டியன் என்பவருக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவமனையின் 2-வது மாடியில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிப்பதற்காக, மருத்துவப் பணியாளர்கள் மற்றும் உறவினர்கள் லிப்ட் மூலம் அழைத்துச் சென்றனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக லிப்ட் திடீரென பழுதடைந்து பாதி வழியிலேயே நின்றது. இதனால் நோயாளி ராமர் பாண்டியன், அவரது மகன் அர்ஜுனன், உறவினர்கள் உட்பட 4 பேரும், மருத்துவமனைப் பணியாளர்கள் 3 பேரும் என மொத்தம் 7 பேர் லிப்டிற்குள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

லிப்ட் கதவு திறக்கப்படாததால் அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்திற்கும் தூத்துக்குடி தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு லிப்டின் கதவை உடைத்து, உள்ளே சிக்கியிருந்த 7 பேரையும் பாதுகாப்பாக மீட்டனர்.

மீட்கப்பட்ட பிறகு நோயாளியின் மகன் அர்ஜுனன் கூறுகையில், "சுமார் ஒரு மணி நேரமாக லிப்டிற்குள் சிக்கித் தவித்தும் உடனடியாக மீட்பு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. தீவிர சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற எனது தந்தையின் நிலைமை இதனால் மேலும் மோசமடையும் சூழல் உருவானது. மருத்துவமனையில் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மருத்துவமனை நிர்வாகத்தின் மீது குற்றஞ்சாட்டினார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லிப்ட் அடிக்கடி பழுது அடையும் சம்பவம் நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.