தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளத் திட்டத்தை மாற்று இடத்திற்கு கொண்டு செல்ல வலியுறுத்தி, முள்ளக்காடு மற்றும் கோவளம் பகுதியில் நூற்றுக்கணக்கான உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் உப்பளங்களில் இறங்கி கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகேயுள்ள முள்ளக்காடு, கோவளம், புள்ளாவெளி உள்ளிட்ட பகுதிகளில் சிறிய அளவிலான உப்பு உற்பத்தியாளர்கள் உணவுக்கான உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தொழிலில் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கோவளம் கடற்கரைப் பகுதியை நம்பி ஏராளமான மீனவர்களும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், முள்ளக்காடு, கோவளம், புள்ளாவெளி பகுதிகளில் சுமார் 3,000 ஏக்கர் நிலங்களைச் சிப்காட் மூலம் கையகப்படுத்தி, கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக கொரிய நாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பாரம்பரிய உப்புத் தொழில் மற்றும் மீன்பிடித் தொழிலை அழித்துக் கொண்டுவரப்படும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள், மீனவர்கள் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இத்திட்டத்தை கைவிட்டு மாற்று இடத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி இன்று நூற்றுக்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் கைகளில் கருப்புக் கொடி ஏந்தி உப்பளங்களில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டமன்றத்தில் இத்திட்டம் குறித்து சாதகமான அறிவிப்பு வெளியாகாவிட்டால், சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவது உள்ளிட்ட அடுத்தகட்டப் போராட்டங்களில் ஈடுபடப்போவதாகப் போராட்டக்காரர்கள் எச்சரித்துள்ளனர். இச்சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

