முத்து நகரம் என அழைக்கப்படும் தூத்துக்குடி, தற்போது அனல்மின் நகரமாக மாறி வருவதாகவும், வாழத் தகுதியற்ற நகரமாக மாறும் அபாயம் உள்ளதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே தூத்துக்குடி அனல்மின் நிலையம் மூலம் 1050 மெகாவாட், கோஸ்டல் எனர்ஜென் மூலம் 1200 மெகாவாட், இந்து பாரத் மூலம் 489 மெகாவாட் உள்ளிட்ட பல தனியார் மற்றும் அரசு அனல்மின் நிலையங்கள் மூலம் மொத்தம் சுமார் 5,584 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி, தூத்துக்குடி அனல்மின் நிலைய வளாகத்தில் தலா 800 மெகாவாட் திறன் கொண்ட 2 புதிய அலகுகள், மொத்தம் 1600 மெகாவாட் திறனில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த அனல்மின் திறன் 7,184 மெகாவாட்டாக உயரும்.

உப்பள தொழிலாளர்கள் எதிர்ப்பு:

"தூத்துக்குடியில் எங்கு பார்த்தாலும் அனல்மின் நிலையங்களாக உள்ளன. தூத்துக்குடி மின் உற்பத்தி நகரமாக மாறிவிட்டதா? மக்கள் வாழும் பகுதியா?" என தூத்துக்குடி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஏற்கனவே அனல்மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள் முறையாக கையாளப்படவில்லை. பல லட்சம் டன் சாம்பல் கழிவுகள் கொட்டப்பட்டதால் கடல் வளம் பாதிக்கப்பட்டுள்ளது, மீன் மற்றும் இறால் இனங்கள் குறைந்து வருகின்றன என மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், தூத்துக்குடி அனல்மின் நிலையம் ஏறத்தாழ 25 சதவீத அளவிற்கு சல்பர் டை ஆக்சைடு என்னும் மனிதர்களுக்கு தீங்கு செய்யக்கூடிய மாசினை வெளியிடுகிறது. இதனால் அருகில் உள்ள துறைமுக அலுவலகம், குடியிருப்பு, தனியார் கடல் சார் தொழில் நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. சாம்பல் குழம்பு கடலில் விடப்படுவதால் கடல் ஆழம் 15-20 அடியில் இருந்து 2-3 அடியாக குறைந்து விட்டதாகவும் மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தமிழகம் 2030-க்குள் 50 சதவீத மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இருந்து பெற இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், புதிய அனல்மின் நிலையமும் தூத்துக்குடியில் அமைக்க அரசு அறிவித்துள்ளது அந்த இலக்கிற்கு எதிரானது எனவும், சூரிய மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

தூத்துக்குடியை சுற்றி, சுற்றி அனல்மின் நிலையங்கள் அமைக்கப்படுவதால் மக்கள் வாழத்தகுதியற்ற பூமியாக மாறிவருகிறது என்பது மட்டும் உண்மை என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.