ஊட்டியிலிருந்து நெல்லை நோக்கிச் சென்ற கார், கயத்தாறு அருகே கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலைத் தடுப்புச் சுவரில் மோதிய விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் தாலுகா பழவூர் சிதம்பராபுரத்தைச் சேர்ந்த பிரவீனஷ் (26), குட்டி (26), சுஜித் (26), வினோத் (24) உள்ளிட்ட 6 பேர் காரில் ஊட்டிக்குச் சுற்றுலா சென்றுவிட்டுச் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை 5.15 மணியளவில் ஊட்டி – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில், கயத்தாறு சரகம் ஆத்திகுளம் மேம்பாலத்தில் கார் வந்துகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாகக் கட்டுப்பாட்டை இழந்த கார் அதிவேகமாகச் சென்று சாலையின் தடுப்புச் சுவரில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில் காரை ஓட்டிவந்த பிரவீனஷ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காரில் பயணித்த குட்டி, சுஜித் மற்றும் வினோத் ஆகிய 3 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.
தகவலறிந்து வந்த கயத்தாறு காவல்துறையினர், காயமடைந்த மூன்று பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், உயிரிழந்த பிரவீனஷின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்துக் கயத்தாறு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

