ஒட்டப்பிடாரம் ஊராட்சியில் பணிமேற்பார்வையாளர் மீது பொய் வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் கூறி, அதை ரத்து செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் ஊர்ப் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஊராட்சியில் அமைந்துள்ள மினி பாரஸ்ட் பகுதியில் 2,000 மரக்கன்றுகள் நடப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான மரங்களை உருவாக்கக் காரணமாக இருந்த பணிமேற்பார்வையாளர் ராஜ்குமார் மீது, ஒப்பந்தக்காரர் ஜெகதீஸ்ராஜா என்பவர் பொய் வழக்கு கொடுத்துள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் அளித்த மனுவில் "ஒப்பந்தக்காரர் ஜெகதீஸ்ராஜா, போர்வெல் அமைக்கும் பணியில் 60 அடிக்கு அவுட்டர் பதித்துவிட்டு 120 அடிக்கு அவுட்டர் பதித்துவிட்டதாகவும், நீர்நிலை தேக்கத் தொட்டி அமைக்கும் பணியை அரைகுறையாகச் செய்துவிட்டதாகவும் தெரிகிறது. பணிகளை அரைகுறையாகச் செய்துவிட்டு முழுத் தொகையையும் கேட்கும்போது, அதுகுறித்துத் தட்டிக் கேட்ட பொதுமக்களையும், பணிமேற்பார்வையாளர் ராஜ்குமாரையும் மிரட்டியுள்ளார்.

பணிகளை முழுமையாக முடித்த பிறகே தொகையைப் பெற்றுக் கொள்ளுமாறு ராஜ்குமார் கூறியதால், ஆத்திரமடைந்த ஒப்பந்தக்காரர் ஜெகதீஸ்ராஜா ஜாதி ரீதியிலான ஆயுதத்தைக் கையில் எடுத்து, காவல் துறை மூலம் ராஜ்குமார் மீது பி.சி.ஆர் பொய் வழக்குப் பதிவு செய்ய வைத்துள்ளார். உண்மையாகவும் நேர்மையாகவும் பணியாற்றி வரும் பணிமேற்பார்வையாளர் ராஜ்குமார் மீதான பொய் வழக்கினை ரத்து செய்து, அவரை மீண்டும் ஒட்டப்பிடாரம் ஊராட்சியில் பணி அமர்த்த வேண்டும்.

மேலும், அரைகுறையாகப் பணிகளைச் செய்து பொய் வழக்குப்பதிவு செய்த ஒப்பந்தக்காரர் ஜெகதீஸ்ராஜாவின் ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும், விசாரணையின்றி பொய் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் மீதும், ஒப்பந்தக்காரர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தங்களது மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.