தம்பியின் சொத்துக்காகப் போலி வாரிசுச் சான்றிதழ் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தனது 76 வயதுத் தாய்க்கு நீதி வேண்டி திரைப்படத் துணை நடிகரும், மாற்றுத்திறனாளியுமான மகன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தார்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் காசிமேஜர்புரத்தைச் சேர்ந்தவர் வீரம்மாள் (76). இவரது தம்பி முருகன் தூத்துக்குடி கதிரேசன் கோவில் தெருவில் வசித்து வந்த நிலையில், தம்பியும் அவரது மனைவியும் குழந்தைகள் இன்றி உயிரிழந்தனர். இதையடுத்து, இரண்டாம் நிலை வாரிசாக வீரம்மாள் மட்டுமே உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், முருகன் வீட்டில் பணிபுரிந்த உமா மகேஸ்வரி என்பவர், தனது குழந்தைகளை முருகனுக்குப் பிறந்தவர்கள் எனக் காட்டி போலி ஆவணங்கள் மூலம் கடந்த 2025 ஜூன் 28 அன்று வாரிசுச் சான்றிதழ் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக வீரம்மாள் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்து, 2026 ஜனவரி 2 அன்று அந்த போலி வாரிசுச் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது. அதற்குள் அந்த போலிச் சான்றிதழைப் பயன்படுத்திச் சில சொத்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தனக்கு வாரிசுச் சான்றிதழ் கோரி வீரம்மாள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை அணுகி உத்தரவு பெற்ற பின்னரும், தூத்துக்குடி வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தங்களை அலைக்கழிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி வருவாய்க் கோட்டாட்சியரின் உத்தரவை எதிர்த்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதுவரை வேறு யாருக்கும் வாரிசுச் சான்றிதழ் வழங்கக் கூடாது எனக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மனு அளித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த வீரம்மாளின் மகனும், 'நான் கடவுள்', 'சிந்து பாத்', 'கேப்டன் மில்லர்' போன்ற படங்களின் துணை நடிகருமான நெல்லை மாரியப்பன், "எனது தாய்க்கு 76 வயதாகிறது. வயது முதிர்வு காரணமாகத் தென்காசியிலிருந்து தூத்துக்குடிக்குத் தொடர்ந்து வந்து செல்ல முடியவில்லை. சீராய்வு மனு மீது உத்தரவு வரும் வரை இடைக்காலத் தடை விதித்து, உரிய விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும்" எனக் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்தார்.