தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் மேலரத வீதியைச் சேர்ந்தவர் முத்துமாரி இவரது மனைவி தேன்மொழி. இவர்கள் இருவரும் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த 5-ஆம் தேதி ராமநாதபுரத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்குச் செல்வதற்காக வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று (செப்டம்பர் 7) காலை வீட்டிற்குத் திரும்பி வந்தபோது, வாசல்கதவு உடைக்கப்பட்டுக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, நிருத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டிருந்ததுடன், வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டுப் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 100 பவுன் தங்க நக கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்து முத்துமாரி அளித்த புகாரின் பேரில் எட்டையாபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வந்து அங்குப் பதிவாகியிருந்த கைரேகைகளைப் பதிவு செய்தனர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுச் சோதனை நடத்தப்பட்டது. சம்பவ இடத்திலிருந்து மோப்பம் பிடித்துச் சென்ற நாய், எட்டையாபுரம் பேருந்து நிலையம் வரை சென்று நின்றது.
இதனால் மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் பேருந்து நிலையம் வரை வந்து, அங்கிருந்து பேருந்தில் தப்பிச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதனிடையே, அப்பகுதியில் நடத்திய தீவிர விசாரணையில் எட்டையாபுரம் அரசு மருத்துவமனை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருடப்பட்ட இருசக்கர வாகனத்தைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சம்பவம் நடந்த இடத்திற்குத் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் நேரில் சென்று பார்வையிட்டு தீவிர விசாரணை நடத்தினார். இச்சம்பவம் குறித்து எட்டையாபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் எட்டையாபுரம் பகுதியில் பூட்டிக் கிடந்த மூன்று வீடுகளில் அடுத்தடுத்து திருட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

