தூத்துக்குடி மாநகரில் இருசக்கர வாகன ஓட்டிகளிடையே தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், போக்குவரத்து காவல் துறை சார்பில் கொரில்லா வேடமணிந்த நபரை வைத்து வித்தியாசமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தூத்துக்குடி மாநகரில் கடந்த சில நாட்களாக இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் பயணித்ததால் சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. இதனைத் தடுக்கும் பொருட்டு, தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே போக்குவரத்து காவல் பிரிவு சார்பில் சுனை முருகன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களில் வந்த வாகன ஓட்டிகளைப் பாராட்டி, அவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அதேவேளையில், தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்குக் கொரில்லா வேடம் அணிந்த நபர் மூலம் லேசாக அடி கொடுத்து, தலைக்கவசம் அணியாமல் செல்வதால் ஏற்படும் ஆபத்துகள் உணர்த்தப்பட்டன.
மேலும், தலைக்கவசம் என்பது அபராதத்தைத் தவிர்ப்பதற்காக அல்ல; உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தான் என்பதை வலியுறுத்தும் வகையில் வாகன ஓட்டிகளுக்குத் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் தமிழன்டா கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜெகஜீவன் ஒலிபெருக்கி மூலம் வாகன ஓட்டிகளுக்குத் தலைக்கவசம் அணிவது மற்றும் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவம் குறித்துப் பிரச்சாரம் செய்தார். காவல் துறையின் இந்த வித்தியாசமான நடவடிக்கை அப்பகுதி பொதுமக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது.

