தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ரூ. 13,077 கோடி மதிப்பீட்டில் அனல் மின் நிலையக் கட்டுமானப் பணிகள் 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. தலா 660 மெகாவாட் திறன் கொண்ட இரு அலகுகளைக் கொண்டுள்ள இந்த மின் நிலையத்தில், 2-ஆவது அலகு 2026 டிசம்பருக்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் அலகின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 2025 செப்டம்பர் 11 அன்று எண்ணெய்யைப் பயன்படுத்தியும், 2026 பிப்ரவரி 4 அன்று நிலக்கரியைப் பயன்படுத்தியும் சோதனை இயக்கம் நடத்தப்பட்டது. தொடர்ந்து 2026 மார்ச் 13 அன்று முதல் அலகு தொடங்கி வைக்கப்பட்டது.
மின் தொகுப்பு விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறை ஆணைய விதிகளின்படி, ஒரு மின் நிலையம் தேசிய மின் தொகுப்பில் கணக்கில் கொள்ளப்பட 72 மணி நேரம் எவ்வித இடையூறுமின்றி முழுச் சுமையுடன் இயங்க வேண்டும்.
அதன்படி, முதல் அலகின் 72 மணி நேர கட்டாய முழுச் சுமை சோதனை ஓட்டம் கடந்த செப்டம்பர் 2 மாலை 4.16 மணிக்குத் தொடங்கி, செப்டம்பர் 5 சனிக்கிழமை மாலை 4.16 மணிக்கு வெற்றிகரமாக நிறைவடைந்தது. அப்போது மின் உற்பத்தி 709 மெகாவாட் அளவை எட்டி, வணிக ரீதியான செயல்பாட்டிற்கான நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தியது.
உடன்குடி அனல் மின் நிலைய முதல் அலகு வணிக ரீதியாகச் செயல்படத் தொடங்கியதன் மூலம், தமிழகத்தின் நிலக்கரி சார்ந்த அனல் மின் உற்பத்தித் திறன் 5,120 மெகாவாட்டிலிருந்து 5,780 மெகாவாட்டாக அதிகரித்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இப்பணிகளின் போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக நிர்வாகப் பொறுப்பில் உள்ள கோவிந்த ராவ் மற்றும் திட்டப் பொறுப்பில் உள்ள சேதுராம் ஆகியோர் உடனிருந்தனர்.

