தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே சுப்பிரமணியபுரம் செட்டித் தெருவைச் சேர்ந்த இலங்காமணி என்பவரது மகன் ஜெயகுமார் (55). கூலித் தொழிலாளியான இவருக்கு ஒரு மகனும், 3 மகள்களும் உள்ளனர். இந்நிலையில், ஜெயகுமார் தனது ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கில் புதுக்கோட்டையிலிருந்து சாயர்புரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
தேரி சாலை - விமான நிலையக் கிழக்குப் பகுதி சாலையில் இரவு சுமார் 8.30 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த பல்சர் பைக் எதிர்பாராதவிதமாக ஜெயகுமாரின் வாகனம் மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், அருகே வந்து கொண்டிருந்த கார் மீது மோதியதில் ஜெயகுமார் பலத்த காயமடைந்தார்.
விபத்தில் காயமடைந்த ஜெயகுமாரை அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துச் சாயர்புரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

