மதுரையிலிருந்து திருச்செந்தூர் சென்ற அரசுப் பேருந்தில் பயணச் சீட்டு பெற்ற பெண் ஊழியரை இரவில் ஆள்நடமாட்டமில்லாத பகுதியில் இறக்கிவிட்டதால், ஆத்திரமடைந்த உறவினர்கள் அரசுப் பேருந்தை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையிலிருந்து திருச்செந்தூருக்கு நேற்று இரவு அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டு வந்தது. வழக்கமாக இந்த அரசுப் பேருந்து ஆத்தூர், ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினம் வழியாகத் திருச்செந்தூர் செல்லும். இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து ஆறுமுகனேரிக்குச் செல்ல 5-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணச் சீட்டு எடுத்துள்ளனர்.
ஆனால், அரசுப் பேருந்து ஊழியர்கள், "இந்தப் பேருந்து ஆறுமுகனேரி ஊருக்குள் செல்லாது; புறவழிச்சாலை வழியாகக் காயல்பட்டினம் செல்லும்" எனக் கூறி, பயணிகளை ஆத்தூரிலேயே இறங்குமாறு கூறியதாகத் தெரிகிறது. இதனை ஏற்றுப் பிற பயணிகள் ஆத்தூரில் இறங்கினர்.
தூத்துக்குடி நியோ டைட்டில் பார்க்கில் பணிபுரியும் ஜெனிஷர் என்ற ஐடி பெண் ஊழியர், தான் ஆறுமுகனேரிக்கு உரிய பயணச் சீட்டு பெற்றுள்ள நிலையில் ஏன் ஆத்தூரில் இறங்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இருப்பினும் அவருக்கு ஆறுமுகனேரிக்கான கட்டணம் பெற்றுக் கொண்டு, ஆறுமுகனேரி சுங்கச்சாவடி (Tollgate) அருகே ஊருக்கு மேற்புறம் உள்ள காட்டுப் பகுதியில் இரவு நேரத்தில் அவரை இறக்கிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இரவு நேரத்தில் ஆள்நடமாட்டமில்லாத பகுதியில் இறக்கிவிடப்பட்டதால் அதிர்ச்சியடைந்த ஜெனிஷர், உடனடியாகத் தனது உறவினர்களுக்குத் தொலைபேசி வாயிலாகத் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உறவினர்கள், அந்த அரசுப் பேருந்தை வழிமறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதத்திற்குப் பிறகு, அரசுப் பேருந்து மீண்டும் புறவழிச் சாலையிலிருந்து திரும்பி ஆறுமுகனேரி ஊருக்குள் சென்று பயணிகளை இறக்கிச் சென்றது. இரவு நேரங்களில் பெண் பயணிகளை இதுபோன்று பாதுகாப்பற்ற பகுதிகளில் இறக்கிவிடுவதைத் தடுக்க, சம்பந்தப்பட்ட அரசுப் பேருந்து பணிமனை நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

