தூத்துக்குடி முத்தையாபுரம், வேலாயுத நகர் 2-ஆவது தெருவைச் சேர்ந்தவர் சங்கிலி மகன் முனியசாமி (45). ஆட்டோ ஓட்டுநரான இவரது மகள் வைஷ்ணவிக்கும், மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த முருகன் (29) என்பவருக்கும் இடையே கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
தம்பதியிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, வைஷ்ணவி கடந்த 2 மாதங்களாகத் தந்தை முனியசாமியின் வீட்டில் வசித்து வந்துள்ளார். தனது மனைவி குடும்பம் நடத்தத் திரும்ப வராததற்கு மாமனார் முனியசாமியே காரணம் என முருகன் கருதியதாகக் கூறப்படுகிறது.
கடந்த திங்கள்கிழமை மதுரையிலிருந்து தனது நண்பர்களுடன் தூத்துக்குடிக்கு வந்த முருகன், மாமனார் முனியசாமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், முருகன் மற்றும் அவருடன் வந்தவர்கள் அரிவாளால் முனியசாமியைச் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றனர்.
இதில் பலத்த காயமடைந்த முனியசாமி உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த முத்தையாபுரம் காவல் துறையினர் வழ்ககுப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த மருமகன் முருகன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த மதுரை வளையங்குளத்தைச் சேர்ந்த நல்லமருது மகன் நல்லு முருகன் (24), ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி எஸ்.கீரந்தையைச் சேர்ந்த குணசேகரன் மகன் திருமுருகன் (23), மதுரை மேல அனுப்பானடி வீடமைப்பு வாரியக் குடியிருப்பைக் சேர்ந்த முருகவேல் மகன் தீனதயாளன் (22), மதுரை சிந்தாமணி தங்க நாடார் காம்பவுண்டைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் பெருமாள் என்ற படையப்பா (26) மற்றும் மதுரை சமணநத்தம் மேலத் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் மகன் அரவிந்த் (25) ஆகிய 6 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

