திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமி, அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி நான்கு ரதவீதிகளிலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை கோலாகலமாகத் தொடங்கியது. காலை 7.00 மணிக்கு நிலவிலிருந்து புறப்பட்ட பிள்ளையார் தேர், நான்கு ரதவீதிகளை வலம் வந்து காலை 7.30 மணிக்கு நிலைக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து காலை 7.35 மணிக்கு சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருளினார்.
நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்த சுவாமி தேர், காலை 8.35 மணிக்கு நிலையை அடைந்தது. பின்னர் காலை 8.40 மணிக்கு புறப்பட்ட வள்ளியம்மன் தேர், ரதவீதிகளில் உலா வந்து வெற்றிகரமாக நிலைக்கு வந்தடைந்தது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு "அரோகரா" என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதற்கான ஏற்பாடுகளைத் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

