தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாக கடைகளை ஒதுக்கீடு பெற்றவர்கள் உள் வாடகைக்கு விட்டு சட்ட விதிகளை மீறி வருவதாகவும், இதனால் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்கப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் மேயர் ஏ.பி.ஆர். அந்தோணி கிரேஸ் புகார் மனு அளித்துள்ளார்.

மேலும், மாநகராட்சி எல்லைக்குள் கடந்த 4½ ஆண்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட லேயவுட்களில் மக்கள் குடியேறாத நிலையில் பாதாள சாக்கடை, குடிநீர் குழாய், சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது குறித்தும், ஆவணங்கள் இன்றி டி.எஸ்.எல்.ஆர் வழங்கப்படுவது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.

புதிய பஸ் நிலையம் அருகே சைக்கிள் ஸ்டாண்ட் முதல் ஆவின் பாலகம், முதல்வர் மருந்தகம் வரை சாலை குறுகலாக இருப்பதால் விபத்துகள் நடப்பதாகவும், பாலத்தில் இருந்து 100 மீட்டரில் சிக்னல் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே கூட்டுறவுத்துறை நிலம் மற்றும் சைக்கிள் ஸ்டாண்ட் நிலத்தை கையகப்படுத்தி சாலையை விரிவாக்கம் செய்யவும், சிக்னலை ஏவிஎம் திருமண மண்டபம் அருகே உள்ள நான்குமுனை சந்திப்புக்கு மாற்றவும், நெடுஞ்சாலைத்துறை அலுவலகங்களை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.