தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தேரிகுடியிருப்பைச் சேர்ந்த விவசாயி மதிபால் (56). இவருக்குச் சொந்தமாக காயாமொழி கிராமத்தில் 86 சென்ட் நிலம் உள்ளது. இதில் தென்னை மற்றும் எலுமிச்சை சாகுபடி செய்து வரும் இவர், அரசு மானியத்தில் சொட்டுநீர்ப் பாசனம் அமைப்பதற்காகச் சிறு, குறு விவசாயி சான்றிதழ் மற்றும் நில அடங்கல் கோரி காயாமொழி கிராம நிர்வாக அலுவலர் தனசேகரை அணுகியுள்ளார்.

சிறு, குறு விவசாயி சான்றிதழ் இணையதளம் மூலம் பெறப்பட்ட நிலையில், நில அடங்கல் வழங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலர் தனசேகர் ரூ. 2,500 லஞ்சமாகத் தருமாறு கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மதிபால், இது குறித்துத் தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீசாரிடம் புகார் அளித்தார்.

இப்புகாரின் பேரில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் பீடர்பால் தலைமையில் போலீசார் நேற்று புதன்கிழமை பிற்பகல் காயாமொழி கிராம நிர்வாக அலுவலகத்திற்குச் சென்றனர். அப்போது மதிபாலிடம் ரசாயனப் பொடி தடவப்பட்ட ரூ. 2,500 நோட்டுகளைக் கொடுத்து அனுப்பினர்.

அந்தப் பணத்தை கிராம நிர்வாக அலுவலர் தனசேகர் பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அவரைச் சூழ்ந்து கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். இது தொடர்பாகப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.