நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாகத் தலைமறைவாக உள்ள பிடிவாரண்ட் நபரை வரும் அக்டோபர் 3-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தச் சாத்தான்குளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி ராமதாஸ் நகர், தாளமுத்து நகர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் சம்சுதீன் மகன் பீர்கனி (எ) பீர்முகம்மது. இவர் மீது நாசரேத் காவல் நிலையத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த குற்றச் சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 457, 34 மற்றும் 397 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட அவர் மீது சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிமன்ற விசாரணைக்குத் தொடர்ந்து முன்னிலையாகாமல் பீர்கனி தலைமறைவாகி வந்ததால், அவருக்கு எதிராக நீதிமன்றம் பிணையில்லா பிடிக்கட்டளை பிறப்பித்தது. இக்கட்டளை பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 82-ன் கீழ் நீதிமன்றம் பகிரங்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பீர்கனி (எ) பீர்முகம்மது வரும் 03.10.2026 அன்று காலை 10.30 மணிக்கு சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட தேதியில் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறினால், அவரது அசையும் மற்றும் அசையா சொத்துகள் ஜப்தி செய்யப்படுவதுடன், சட்டப்படியான மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேலும், தலைமறைவாக உள்ள பீர்கனியைத் தேடிக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு நாசரேத் காவல் துறையினருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.