தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் இரவு நேரங்களில் போதை ஆசாமிகள் சிலர் மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாகச் சென்று அச்சுறுத்தி வருகின்றனர். சாலையில் நடந்து செல்வோரையும் வாகனங்களில் செல்வோரையும் மிரட்டுவது, தகாத வார்த்தைகளால் பேசுவது மற்றும் வழிப்பறியில் ஈடுபட முயல்வது போன்ற சட்டவிரோதச் செயல்களில் இக்கும்பல் ஈடுபட்டு வருகிறது.
போதைக் கும்பலின் இந்தச் செயலால் காலை, மாலை வேளைகளில் பெண்கள், பள்ளி மாணவவிகள் மற்றும் இரவுப் பணி முடிந்து வீடு திரும்பும் தொழிலாளர்கள் பெரும் அச்சத்துடன் சாலையில் செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது.
எனவே, தூத்துக்குடி மாநகரக் காவல் துறையினர் இரவு நேர ரோந்துப் பணிகளை உடனடியாகத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் இந்த போதைக் கும்பலைக் கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

