சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவைப் பசுமையாகவும், சுற்றுச்சூழல் நட்பாகவும் கொண்டாட வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மக்களுக்கு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா அமைப்பாளர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய அறிவுறுத்தல்கள்: ரசாயனப் பொருட்களைத் தவிர்த்து, களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகள் மற்றும் இயற்கைச் சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சிலை வழிபாட்டின் போது இயற்கை மலர்கள், இலைகள் மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணிகளைக் கொண்டு அலங்கரிக்க வேண்டும். பிரசாத விநியோகத்திற்கு நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களைத் தவிர்த்து, மட்கும் தன்மை கொண்ட அல்லது மீண்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகளைப் பயன்படுத்த வேண்டும்.

பந்தல்கள் மற்றும் வழிபாட்டு இடங்களில் LED விளக்குகளைப் பயன்படுத்தி மின்சாரத்தைச் சேமிக்க வேண்டும். அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் முறைப்படி அறிவிக்கப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளைக் கரைக்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தவிர்க்கும் நோக்கில் தூத்துக்குடி மாவட்டச் செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் அலுவலகம் சார்பில் இந்த விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.