தூத்துக்குடி மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார், கோவில்பட்டி உட்கோட்டம் கொப்பம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மஹிந்திரா காரை நிறுத்திச் சோதனை செய்தனர்.

அச்சோதனையில், காரில் சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. காரில் இருந்து மொத்தம் 425 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

இக்கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், பனையடிப்பட்டியைச் சேர்ந்த கண்ணன் (40), குஜராத் மாநிலம் பனாஸ்காந்தா மாவட்டம், தீசா தாலுகாவைச் சேர்ந்த கம்லேஷ் சவுத்ரி (25), ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டத்தைச் சேர்ந்த ரவீந்திர சிங் (20) ஆகிய 3 பேரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.