தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் புதுநகரைச் சேர்ந்த தங்கத்தின் மகன் கருணாகரன் (57). இவர் பழைய காயலில் உள்ள அஸ்வினி இறால் நிறுவனத்தில் இரவுப் நேரக் காவலாளியாகப் பணியாற்றி வருகிறார்.

இன்று நேற்று நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில், தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி வந்த 3 நபர்கள் கொண்ட கும்பல், காவலாளி கருணாகரனிடம் வந்து "தங்களிடம் பெட்ரோல் போடுவதற்குப் பணம் இல்லை என்றும், ஜி-பே மூலம் பணம் அனுப்ப முடியுமா?" என்றும் கேட்டுள்ளனர். அதற்கு அவர் "இல்லை" என்று கூறியதும், அக்கும்பல் அவரிடமிருந்த சாம்சங் செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பியது.

பின்னர் திருச்செந்தூர் நோக்கிச் சென்ற அக்கும்பல், தலைவன்வடலி கிராமத்திற்குள் நுழைந்துள்ளது. அங்கு நாடார் தெருவைச் சேர்ந்த மகாராஜனின் மகன் தங்கப்பெருமாள் (26) என்பவரைத் தாக்கி, அவரிடமிருந்த இருசக்கர வாகனத்தை வலுக்கட்டாயமாகப் பறித்துக்கொண்டு தப்பியது.

அச்சமயத்தில் அப்பகுதியில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல் துறையினரிடம் காவலாளி கருணாகரன் இச்சம்பவம் குறித்து உடனடியாகத் தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் விரைந்து செயல்பட்ட போலீசார், தப்பியோடிய 3 பேரையும் விரட்டிப் பிடித்து ஆத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

இவ்வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி லெவஞ்சிபுரம் 2-வது தெருவைச் சேர்ந்த மாடசாமியின் மகன் ராமசாமி (25), அந்தோணியார் புரம் 3 சென்ட் பகுதியைச் சேர்ந்த ஜாகிர் உசேனின் மகன் முகமது யாஷின் (22) மற்றும் சாந்திநகர் 2-வது தெருவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனின் மகன் ராஜதுரை (19) ஆகிய 3 பேரையும் ஆத்தூர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.