மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் 'மை பாரத் கேந்திரா' சார்பில் நாடு முழுவதும் இளைஞர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் வெற்றி பெறுபவர்கள் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் தங்களது திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும் எனத் தூத்துக்குடி மாவட்ட இளைஞர் நல அலுவலர் மதுமிதா தெரிவித்துள்ளார்.
'வளர்ச்சியடைந்த இந்தியாவில் இளம் தலைவர்களின் உரையாடல்' என்ற தலைப்பின் கீழ் கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் இப்போட்டிகள் நடைபெறுகின்றன.
இளைய சமுதாயத்தினரின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் வகையில் வினாடி-வினா போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், ஹேக்கத்தான் மற்றும் இளம் தொழில்முனைவோருக்கான சவால்கள் ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
வயது வரம்பு: 15 முதல் 29 வயது வரை உள்ள அனைத்து மாணவர்களும் இளைஞர்களும் இப்போட்டிகளில் பங்கேற்கலாம்.
பதிவு செய்யும் முறை: விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் mybharat.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
மாநில அளவில் தேர்வு செய்யப்படுபவர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பார்கள். தேசிய போட்டிகளில் வெற்றி பெறுவோர் வரும் 2027 ஜனவரி 10 முதல் 12-ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெறும் தேசிய இளைஞர் தின விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.
அந்நிகழ்வில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் தங்களது திறமைகளை நிரூபிக்கும் பொன்னான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கும். எனவே, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் அதிகளவில் இதில் பங்கேற்று இவ்வாப்பினரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட இளைஞர் நல அலுவலர் மதுமிதா கேட்டுக்கொண்டுள்ளார்.

