இம்மானுவேல் சேகரன் பிறந்தநாள் விழாவை வழக்கமாக நடைபெறும் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, லெக்கம்பட்டி கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இலந்தைகுளம் பகுதியில் ஆண்டுதோறும் இம்மானுவேல் சேகரன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாளை (செப்டம்பர் 11) இம்மானுவேல் சேகரன் விழா நடைபெற உள்ள சூழலில், வழக்கமாக நடைபெறும் இலந்தைகுளம் பகுதியில் ஏற்பாடுகள் செய்யப்படாமல், வேறு பகுதியான லெக்கம்பட்டியில் விழாவை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

விழா நடத்தும் இடத்தை மாற்றுவதால் அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அபாயம் இருப்பதாகத் தெரிவித்துள்ள லெக்கம்பட்டி கிராம மக்கள், வழக்கமாக விழா நடைபெறும் இலந்தைகுளம் பகுதியிலேயே விழாவை நடத்தக் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தங்களது கோரிக்கையை வலியுறுத்தி லெக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் திரளாக வந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்துப் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இச்சம்பவத்தால் எஸ்.பி. அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.