அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் நகராட்சிப் பகுதிகளில் அடிப்படை சுகாதார வசதிகள் இன்றிப் பொதுமக்கள் மற்றும் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

இது குறித்துப் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிருத்விராஜ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது: "திருச்செந்தூர் நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள் முறையாகத் தூர்வாரப்படாமல் அடைபட்டுக் கிடக்கின்றன. இதனால் கழிவுநீர் சாலைகளில் தேங்கி நின்று துர்நாற்றம் வீசி வருகிறது.

நகரின் பல இடங்களில் கழிவுநீர் கால்வாய்கள் திறந்த நிலையிலேயே காணப்படுவதால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் வியாபாரிகளுக்குத் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை"* என்று குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, திருச்செந்தூர் நகராட்சிப் பகுதிகளில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றுவதுடன், அடைபட்டுக் கிடக்கும் கழிவுநீர் கால்வாய்களைத் தூர்வார விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.