தூத்துக்குடி ஸ்ரீ கணேஷ் நகரில் அருள்மிகு வடபத்திரகாளி அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் பங்கேற்கும் இளைஞர்களுக்குக் குழுவாக ஆடைகள் தேர்வு செய்வது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த மாரி (43), சுயம்புலிங்கம் (43) மற்றும் விஸ்வந்த் (18) ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுத் தகராறு உருவாகியுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோவில் அருகே வைத்து மாரி, சுயம்புலிங்கம் மற்றும் எதிர் தரப்பைச் சேர்ந்த விஸ்வந்த் உள்ளிட்ட 4 பேருக்கும் இடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த விஸ்வந்த் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து, மாரி மற்றும் சுயம்புலிங்கத்தைக் கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய விஸ்வந்த் உள்ளிட்ட 4 பேரையும் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.

