தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் அனுமதியின்றிப் பதாகைகள், பேனர்கள் அமைத்தல் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்துத் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் செய்திக்குறிப்பில் "தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக அமைக்கப்படும் தற்காலிக மற்றும் நிரந்தர ஆக்கிரமிப்புகள் மாநகராட்சி நகரமைப்புப் பிரிவினரால் அவ்வப்போது அகற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக, விளம்பரப் பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் உடனுக்குடன் அகற்றப்படுவதுடன், விதிமுறைகளுக்கு முரணாக அமைக்கப்படும் பேனர்கள் அகற்றப்பட்டுச் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த வாரத்தில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கவனத்தைத் திசை திருப்பும் வகையில் மாநகரப் பகுதிகளில் விதிமுறைகளுக்கு முரணாக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உரிய அனுமதியின்றி விதிகளுக்கு முரணாகப் பதாகைகள், பேனர்கள் அமைத்தல் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டுவதை முற்றிலுமாகக் கைவிட வேண்டும். இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் வாயிலாக மேற்கொள்ளப்படும் தூய்மை மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா கேட்டுக்கொண்டுள்ளார்.

