சமத்துவ மக்கள் கழகத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் மாலைசூடி பி.எம். அற்புதராஜ், சென்னை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகப் பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி ஒரு முக்கியத் துறைமுக நகரமாகவும், தொழில் மற்றும் வர்த்தக மையமாகவும் விளங்குகிறது.
வணிகர்கள், தொழிற்சாலைப் பணியாளர்கள், மாணவர்கள், மருத்துவச் சிகிச்சைக்காகச் செல்வோர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் ரயில் போக்குவரத்தையே பெரிதும் நம்பியுள்ளனர். தற்போது தூத்துக்குடி - சென்னை இடையே முத்துநகர் அதிவிரைவு ரயில் மட்டுமே தினசரி வழக்கமான ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது. ஆண்டு முழுவதும் முத்துநகர் ரயிலில் அதிக அளவில் காத்திருப்புப் பட்டியல் (Waiting List) இருப்பது, கூடுதல் ரயில் சேவைகளுக்கான பயணிகளின் தேவையைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
எனவே, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே நிர்வாகம் கீழ்க்கண்ட கோரிக்கைகளைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்:
1. பகல் நேர இன்டர்சிட்டி அல்லது வந்தே பாரத் விரைவு ரயில்: தூத்துக்குடி - சென்னை இடையே பகல் நேர இன்டர்சிட்டி விரைவு ரயில் அல்லது வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்த வேண்டும்.
2. தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் விரைவு ரயில்: கோயம்புத்தூர் வழியாக இயக்கப்படும் இவ்விரைவு ரயில் தற்போது வாரத்திற்கு இருமுறை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனைத் தினசரி ரயில் சேவையாக மாற்ற வேண்டும்.
3. மதுரை - மும்பை ரயில் நீட்டிப்பு: ரயில் எண்கள் 22101/22102 கொண்ட மதுரை - மும்பை லோக்மான்ய திலக் முனையம் விரைவு ரயிலைத் தூத்துக்குடி வரை நீட்டித்து, தூத்துக்குடியிலிருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. மதுரை - சென்னை ரயில் நீட்டிப்பு: ரயில் எண்கள் 22623/22624 கொண்ட மதுரை - சென்னை விரைவு ரயிலைத் தூத்துக்குடி வரை நீட்டித்து, தூத்துக்குடியிலிருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்". மேலும், இக்கோரிக்கை மனுக்களின் நகல்கள் தெற்கு ரயில்வே முதன்மை தலைமை இயக்க மேலாளர் மற்றும் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

