தூத்துக்குடி தெர்மல் நகர் ஊரணி ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்த ராமர் மகன் முத்துகிருஷ்ணன் (19). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் சாக்கு கம்பெனியில் லோடுமேனாக வேலை செய்து வந்தார். முத்துகிருஷ்ணன், அந்த நிறுவனத்தில் இதற்கு முன்பு பணிபுரிந்த பெண் ஒருவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தக் காதல் விவகாரம் அப்பெண்ணின் வீட்டிற்குத் தெரியவந்ததை அடுத்து, பெண்ணின் உறவினர்கள் முத்துகிருஷ்ணனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எச்சரித்துள்ளனர். மேலும், அந்தப் பெண்ணிற்குத் திருமணமாகிவிட்டதாகவும், இனிமேல் அவரைத் தொடர்பு கொள்ளக் கூடாது என்றும் கண்டிப்புடன் தெரிவித்துள்ளனர்.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கும், விரக்திக்கும் ஆளான முத்துகிருஷ்ணன், நேற்று அதிகாலை தனது வீட்டின் வெளிப்புறம் உள்ள சமையலறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தெர்மல் நகர் போலீசார், முத்துகிருஷ்ணனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.