தூத்துக்குடி அருகே பெரியநாயகிபுரம் பகுதியில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,850 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி அருகேயுள்ள பெரியநாயகிபுரம் பகுதியில் பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசியைக் குறைந்த விலைக்கு வாங்கி, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் பேரில், பறக்கும் படை தனி தாசில்தார் முத்து, குடிமைப் பொருள் வழங்கல் தனி தாசில்தார் ஞானராஜ் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர்கள் மகாராஜா, வெங்கடேஷ், சதீஷ் ஆகியோர் அப்பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அப்பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் தலா 50 கிலோ எடை கொண்ட 30 மூட்டைகள் மற்றும் தலா 35 கிலோ எடை கொண்ட 10 மூட்டைகள் என மொத்தம் 40 மூட்டைகளில் சுமார் 1,850 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
உடனடியாக அதிகாரிகள் அந்த ரேஷன் அரிசி மூட்டைகளையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் லோடு ஆட்டோ ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும், இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக மகேஷ் என்ற வியாபாரியை அதிகாரிகள் மடக்கிப் பிடித்து, தூத்துக்குடி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

