தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி அண்மையில் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட திலீபன் என்பவருக்குக் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், இலந்தவிளையைச் சேர்ந்த வழக்கறிஞர் விஜய் ஆனந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் சொத்தவிளையைச் சேர்ந்தவர் திலீபன். இவர் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்தார். முன்னதாக, சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவில் அயற்பணியில் இருந்தபோது, எவ்வித முன் அனுமதியோ அல்லது தகவலோ இன்றி 555 நாட்கள் பணிக்கு வராமல் இருந்ததாகவும், மருத்துவக் குழுவின் முன்பு ஆஜராகாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பான துறை ரீதியான விசாரணையின்போது உரிய ஒத்துழைப்பு மற்றும் விளக்கக் கடிதம் அளிக்காததால், இன்ஸ்பெக்டர் திலீபனைப் பணியிலிருந்து விடுவித்து நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் (டி.ஐ.ஜி.) திருநாவுக்கரசு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், திலீபன் நேற்று முன்தினம் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், தனது வீட்டிற்கு வந்த கும்பல் ஒன்று தனக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், இது தொடர்பாக அவர் சுசீந்திரம் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில், இலந்தவிளையைச் சேர்ந்த வழக்கறிஞர் விஜய் ஆனந்த், அவரது தந்தை சவுந்தரபாண்டியன், தாயார் மற்றும் நண்பர்கள் ரஞ்சித், சதீஷ் ஆகியோர் தன்னைத் தகாத வார்த்தைகளால் பேசி, கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இப்புகாரின் அடிப்படையில், வழக்கறிஞர் விஜய் ஆனந்த் உட்பட 5 பேர் மீது சுசீந்திரம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தனீஷ் லியோன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இதில், வழக்கறிஞர் விஜய் ஆனந்தை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

