தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பருவமழையால் சேதமடைந்த சாலைகளில் உள்ள பள்ளங்களைச் சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

மாநகராட்சியின் 4 மண்டலங்களுக்கு உட்பட்ட முக்கிய சாலைகள், உட்புற சாலைகள் மற்றும் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் மழையால் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் மேற்கொள்ளும் கள ஆய்வுகளின் அடிப்படையில், முன்னுரிமை வழங்கப்பட்டு இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில், கடந்த 3 மாதங்களில் மட்டும் மாநகராட்சிப் பகுதிகளில் 228 இடங்களில் சாலைப் பள்ளங்கள் கண்டறியப்பட்டுச் சீரமைக்கப்பட்டுள்ளன.

மழைக்காலத்தில் சாலைகளில் ஏற்படும் பள்ளங்களால் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் பொருட்டுத் தினசரி கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சேதமடைந்த சாலைகள் உடனுக்குடன் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

மேலும், மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகளில் பள்ளங்கள் இருப்பது குறித்துப் பொதுமக்கள் 1800 203 0401 என்ற மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணிற்குத் தகவல் தெரிவித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.