தூத்துக்குடி மாவட்டத்தில் மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை குறித்துத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, "தரவுகள் ஏதும் இல்லாததால் தகவல் வழங்க மார்க்கமில்லை" என அதிகாரிகள் அளித்துள்ள பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி கீழச்சண்முகபுரம் 4-வது தெருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மு. இலட்சுமணன், 2005-ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். அதில், தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 பெற்ற மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை, தூத்துக்குடி தாலுகாவில் மே மாதம் வரை உரிமைத் தொகை பெற்றவர்களின் எண்ணிக்கை மற்றும் 2026-ஆம் ஆண்டு ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் வழங்கப்பட்ட பயனாளிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களைக் கேட்டிருந்தார்.
இம்மனுவிற்குத் தூத்துக்குடி சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ளார். அதில், "மகளிர் உரிமைத் தொகை பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை குறித்து அரசின் இணையதளப் பதிவுகள் ஏதும் இல்லாத நிலையிலும், மாவட்ட மற்றும் வட்ட அலுவலகங்களில் தரவுகள் எதுவும் இல்லாத நிலையிலும் தாங்கள் கோரியுள்ள தகவல்களை வழங்கிட மார்க்கமில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் முக்கிய நலத்திட்டமான மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்த அடிப்படைத் தரவுகள் கூட மாவட்ட மற்றும் வட்ட அலுவலகங்களில் இல்லை எனப் பதிலளிக்கப்பட்டிருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

