பீகார் மாநிலம், சமஸ்திபூர் மாவட்டம், ஜோர்புரா படோரி கிராமத்தைச் சேர்ந்த தேவ்லால் ராம் மகன் சுரேஷ் ராம் (55). இவரது மனைவி கிருஷ்ணா தேவி. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். சுரேஷ் ராம் கடந்த நான்கு ஆண்டுகளாகத் தூத்துக்குடி மாவட்டம் வடக்கு காரசேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இவருடன் இவரது இரண்டாவது மகனான உட்டம் குமார் (25) என்பவரும் அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சுரேஷ் ராம் ஆறு மாதங்கள் இங்கு வேலை பார்த்துவிட்டு, ஆறு மாதங்கள் சொந்த ஊருக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதன்படி, சொந்த ஊரிலிருந்து திரும்பி வந்து பணியில் சேர்ந்து மூன்று மாதங்கள் ஆகின்றன.

இந்நிலையில், பீகாரில் வசித்து வரும் சுரேஷ் ராமின் கடைசி மகனுக்குத் திருமணமாகி இரண்டு மாதங்கள் ஆகின்றன. அவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த சுரேஷ் ராம், உடனடியாகச் சொந்த ஊருக்குச் செல்ல நினைத்தும் செல்ல முடியாத சூழலில் இருந்துள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த அவர், நேற்று (18.11.2026) இரவு தான் தங்கியிருந்த இடத்தின் அருகே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து அவரது இரண்டாவது மகன் உட்டம் குமார் அளித்த புகாரின் பேரில், முறப்பநாடு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.